Saturday, 30 July 2011


காலம் என்னை
கடந்து செல்கிறது...
காத்திருப்புக்களின் கனதிகளால்....!!!!
சேர்ந்து ஓட முடியாத
சோகத்தில் இப்போ -அதனை
வழியனுப்பி வழியனுப்பி
பெருமூச்சை மட்டும்
பெரிதாய் வெளித்தள்ள முடிகிறது...

சாதிக்க துணிகையில்
சோதிக்க நினைக்கிறது காலம்..
ஏதேதோ எண்ணி
எடுத்து வைக்கும் ஒரு அடியும்
ஏமாற்றங்களாகி விடுகிறது ..
படைப்பதும் எடுப்பதும்
கடவுள் செயல்
இடையில் நடப்பவைக்கு
நானல்ல பொறுப்பென்று
இறைவனும் ஒருபக்கம் -என
சில மனிதர் வாழ்க்கையில் ..

நீள்கின்ற பகல்களின்
நிறுத்த முடியாத குழப்பங்கள்
நின்மதியற்ற சுவாசங்களாய்
அடைபட்டு தவிக்கிறது..

வருகின்ற இருளுக்காய் காத்திருந்து
வலுக்கட்டாயமான தூக்கத்தை
வாரி அணைத்தும்
சாமங்கள் முழுதும்
காண்கின்ற கனவுகளுக்கோ
கணக்கில்லை -அதனால்
விழிகள் இரண்டும்
ஒட்ட மறுக்கின்றது..
புரண்டு புரண்டு படுத்து
புண்பட்டு போவது
படுக்கையும்தான் !!
எல்லாமே எதிர்பார்ப்பின்
ஏவலே...

நாளை என்று
நினைப்பதெல்லாம்
நான்கு வருடங்களாகி விடுகிறது..
பூமியோ ஒரு சொட்டும்
பரிவின்றி சுழன்று கொண்டிருக்கிறது..

இரவுக்கும் பகலுக்கும்
இளைப்பாற நேரமிருக்கு -இந்த
இதயத்தின் துடிப்பிற்கு
இறந்த பின்பே..-அதனால்
இறுதி வரையும் ஏக்கத்தோடே
இயங்கிக் கொண்டிருக்கிறது..

எதிர் பார்ப்புகளின் மிச்சம்
ஏமாற்றமாகிப் போவதால்
நம்பிக்கையற்ற வாழ்வாய்
நலிந்து கொண்டிருக்கிறது -அதனால்
நிகழ்ந்த பின்னே
நடக்கும் வழியை
நினைத்துப் பார்க்கிறேன் ...
ஏமாற்றமற்று வாழ்வதற்கு !!!

நன்றி ... செண்பகம்

Wednesday, 27 July 2011


கரை நிரந்தரமில்லை என
கரை தேடும் அலைக்குத் தெரியும் - என்றாலும்
கரையைத் தழுவி அலுத்தபின்,
கடலில் போய் அலையும் சேரும்!

உறவைத் தேடி அலையும் மனிதா...!
உறவைத் தேடி அலுத்த மனிதா...!
உன்னை நீயே அறிந்து கொண்டால்,
'உறவுமில்லை, பிரிவுமில்லை' என
உறவின் உண்மை புரிந்து விடும்!


தனித்து நிற்கும் மரங்கள் கைகுலுக்குகின்றன ... கிளைகளை விரித்து ! நெருக்கமாய் மனிதன் தனித்து வாழ்கிறான் ... மனமதைச் சுருக்கி !!

எத்தனை விஷயங்கள்
எண்ணிலடங்கா ஆசைகள்
எதுவும் செய்ய முடியா
எதிர்க்கும் சக்தியற்ற
ஏகாந்த மனோநிலை...!

அத்தனைக்கும் ஆசைப்படு என்றே
பித்தன் ஒருவன் சொன்னான்
சரி எத்தனைக்கு ஆசைப்பட்டால்
ஏதாவது ஒன்று கிடைக்கும்....?

இத்தனைக்கும் இயல்பாய்
இருக்கவென்றே இயன்றவரை
முயன்ற போதும்
இசையாத மனதினை
என்ன சொல்லி
இசையச்செய்ய....?

சமயத்தில் கடந்த காலத்தில்
நிகழ்ந்த நிகழ்வுகள் எல்லாம்
நிகழும் காலத்திலோ
நிலைத்து நிற்பது இல்லை...!

நிகழ்காலத்தில் நடந்த எல்லாம்
எதிர்காலத்தில் தொடர்வதில்லை...
அப்படித் தொடரா நேரமோ
அங்கே தொடரும் பெருங்கவலை...!

ஓர் நாளில் ஓராயிரம் மாற்றங்கள்
அமைதியான ஓடையாய்
ஆர்ப்பாட்டம் இல்லா அருவியாய்
கலங்களில்லா நீர்த்தேக்கமாய்
கற்பனையில் தான் வாழ முடியுமோ...?

Tuesday, 26 July 2011


யாருமற்ற வெட்டவெளியில்
சிறகு விரித்து பறக்கும் -என்
மனது....

பெற்றவர்களும் மற்றவர்களும்..!
இணையாய் வந்தவளும்...!!
துணை என சொன்னவர்களும்...!!!

தங்களுக்கு தாங்களே
வட்டமிட்டு குறுக்கிக்கொள்ள நான்
தனிமைத்துயரில் தவித்து
மௌனமாகிறேன்.

கசப்பேறிய மனதோடு
வெளிப்படுத்தமுடியாத
கோபமும் ஆதங்கமும்
நிராசையுமாக வாழ்கையை
கடத்திக்கொண்டிருக்கின்றேன்
எல்லோரும் சூழ இருந்தும்..
தனிமையில்.................

தயக்கங்களும் தவிப்புகளும்
வேடிக்கைகளும் வினோதங்களும்!!!


வலிகளும் வதைகளும்

பூரிப்புகளும் புல்லரிப்புகளும்!!!

அலைப்புறுதலும் அவலமும்
நிறைந்த வாழ்கை பயணம்
ஒரு சுழற்புதிர் பாதையாக செல்கின்றது!!

கடந்து வந்து விசித்திர பாதைகள்
கடந்த காலமெனும் தாழியில்

போய் விழுந்து விடுகின்றது!!!


காலமெனும் விசை
யாவையும்
சுற்றிவிடுகின்றது!!!

அவமதிப்பு எனும் நிழல் நீள்வதும்

சுருங்குவதுமாய் தொடர்கின்றது!!!


ஆனாலும் பாதையின் தொலைவு

விலகாமல் நீண்டுகொண்டே செல்கின்றது!!!!

என் உலகில்
இது போன்ற நிகழ்வுகளே அதிகம்....

என் அன்பு அற்பமாகவும்
என் அக்கறை அவமதிப்பாகவும்
என் நேசம் வேஷமாகவும்
என் பாசம் பைத்தியக்காரத்தனமாகவும்....
என் கருத்துகள் கர்வத்தின் வெளிப்பாடாகவும்
உங்களுக்கு தோன்றிடலாம்....

அவரவர் உலகம்
அவரவர்க்கான கோணங்களில்
அவரவர்க்காய்......

உங்களுக்கான பாதையில்
உங்களின் நடையை
நான் எப்போதும்
தடுக்கப்போவதேயில்லை.....

எனக்கான பாதையில்
என் நடையை
என் மனம் வழிநடத்தட்டும்!!!


Monday, 25 July 2011


எனக்கு மட்டும்
ஏன் இப்படி
எனக்கேட்டுக்கொள்ள
எல்லாருக்குமே
ஏதோ ஒன்று
நடந்துகொண்டு தான்
இருக்கிறது.......

‍‍எல்லைகளில்லாமல்
விரியும் என் வெளி
முடிந்துகொண்டிருக்கிறது
தொடங்குவதற்கு
முன்பாகவே......

சபை நாகரிகத்திற்காய்
உதிர்க்கப்படும்
சிரிப்புகளில்
உதிர்ந்து விழாமல்
ஒளிகின்றன
செயற்கை முத்துக்கள்.....

மிக‌ச்சிக்க‌லாய்
நீண்டு வளைந்துநெளிந்து
செல்லும் பாதை
நேராகிக்கொண்டிருக்கிறது
கடந்து செல்ல‌ செல்ல......

காரணமே இல்லையென
கூறப்படும்
மனவருத்தங்களுக்குப் பின்
உலகத்திற்கு
சொல்ல முடியாமல் போன
பல காரணங்கள்
புதைந்திருக்கின்றன
எப்பொழுதும்.....!!!!


வலி நிறைந்த வழிதனைக்
கடந்து வந்துள்ளேன்
கடக்கும் தூரம் என் முன் நீள்கிறது

கடந்த பாதையை உற்று நோக்கின்
மேடு பள்ளங்கள்
என் முகத்தின் சாடையை
ஒத்திருக்கின்றன

பயணத்தின் நடுவே
கண்ணில் தெரியும் மரங்கள்
எதுவும் மரங்களாய் இல்லை
என்னுடன் வாழ்ந்து
என்னுள் மரித்துப் போன நீயாய்
நிற்கின்றன

வாழ்வின் ஆரம்பப் புள்ளியில்
நிற்பதாய் நினைத்திருந்தேன்
பல நேரங்களில்
முடியும் நேரம் என் வீட்டு கடிகாரத்தில்
என்னை விட வேகமாய் ஓடுகின்றது

முகமெங்கும் ஒவ்வொரு நாளும்
சுருக்கங்கள் பாவத்தின் எண்ணிக்கையாய்

சோர்வின் அழுத்தம்
முதுகில் அழுக்காய்
எட்டாத தூரத்தில் உறுத்துகிறது

மறந்து போகும் நிழலாய்
திடீரென என் முன் நீள்கின்றன
கனவுகள்

இரவுகள் மிகுந்த அச்சத்துக்கிடையில்
கழிகின்றன
முகம் போர்த்தும் போர்வை
இறுதி நெருப்பாய் கொதிக்கிறது

எனை நானே சுமக்கும்
பாடையாய் மாலை சூடி
ஊரெங்கும் ஊர்வலம் போகிறேன்

விடியும் ஒவ்வொரு காலையும்
போக்கியாக வேண்டிய
இன்றைய மணித்துளிகளை
கனமாய் ஏந்தி காத்திருக்கிறது ....!!!

நிகழ் காலங்கள் நிஜம்
போலத் திரிகின்றன
கடந்து வந்தவை காணாமல்
போய் விட்டதாய்
ஒரு உணர்வு

இன்றிருப்பது மட்டுமே இன்றாகிப் போகிறது

ஏதோ ஒரு காட்டுக்குள்
கட்டவிழ்ந்து கிடக்கிறேன்
பயணங்களின் முடிவு தேடி
நடந்து கொண்டே இருக்கிறது நேரம்

உடன் நடக்கும் பாதச் சுவடு
மறந்து பாதை மாறி நடக்கிறேன்
எங்கோ சிதறும் ஒரு துளி நீரின்
சத்தத்துக்காக

ஒவ்வொரு நாளும் புதிதாய்ப்
பிறக்கிறேன்
மறுபடி ஒரு பயணத்துக்காக

நீர்த்துப் போன வாழ்வில்
சாரல் அடித்து
வெடித்துத் திறக்கிறது
என் பாலை

வெளியெங்கும் விரவிக் கிடக்கிறது
எப்போதோ சிந்திப் போன
புணர்ச்சியின் மிச்சங்கள்

அணைத்துப் போன தடங்கள்
தடுமாற்றத்துடன்
நிகழ்ந்ததைச் சொல்கிறது
என் இரவுக் கதைகளில்

தொடங்கும் இடம் தேடி
அலைகிறது மறந்து போன
காதலின் எச்சங்களை
மனம்

ஏன் வந்ததென்று தெரியாமல்
வந்து விட்டு போகிறது
ஒவ்வொரு இரவுகளிலும்
நேற்றின் ஆழ் முத்தங்கள்

நீளும் பயணம்
நீண்டு கொண்டே இருக்கிறது
மேலும் மேலும்
இன்னும் இன்னும்

மறுபடி ஒரு பயணத்துக்காய்

வெளிப்படுத்திய அன்புக்கே
விலையில்லாத பொது,
புதைத்து வைத்திருக்கும் அன்பை
புரிந்துகொள்ளவில்லை என்று
வருத்தப்படுவதில்
பொருளேதும் இல்லை ...!

மற்றவரை மகிழ்விக்கும்
கோமாளி நான்...!

என் துயரம் கேட்கும் செவிகள் இல்லை,
கண்ணீர் துடைக்கும் கரமும் இங்கில்லை,
சாய்ந்து அழ தோளும் இல்லை,
சேர்ந்து நடக்கும் கால்களும் இங்கில்லை,
மீண்டும் வேகிறேன் தனிமைத் தீயில்...!

பசி தீர்க்க பணமும்,
கவலை தீர்க்க கவிதைகளும்
காதல் தீர்க்க கனவுகளும்,
மட்டுமே என்வசம்..!

அணைக்குள் அடைந்திருக்கும்
ஆற்று வெள்ளமென
விழித்திரைக்குள் தடுத்துவிட்ட
என் கண்ணீர்த் துளிகளோடு,
எல்லோரும் ரசிக்கும் ஒரு புன்னகையை
முகத்தில் மாட்டிக்கொண்டு,

மற்றவரை மட்டும் மகிழ்விக்கும்
கோமாளி நான்...!
என்னை நானே ஏமாற்றிக்கொள்ளும்
ஏமாளி நான்...!

ஆழ்கடலில் புதைக்க நினைத்த
நினைவுகள் எல்லாம்
கடல் அலைகளாய்
மேலே வர
அழிக்க முடியா நினைவுகளுடன்
அமைதியாய் நிற்கிறேன்

Wednesday, 20 July 2011


ம்பிக்கைகளின்
நுனியில்
வாழ்க்கை
தொங்கிக் கொண்டிருக்கிறது .

சிதிலமடைந்த மனத்தின்
இருண்ட பொந்துகளில்
அலைந்து கொண்டிருக்கின்றன
சில நம்பிக்கைகள்

நாளை அவை
விபரீதக் கனவுகளாகி
ஓரிரவின் அமைதியை
விழுங்கலாம்.

பாழடைந்த கோவில்களின்
மயான மூலைகளில்
வௌவால்களாக தொங்கலாம்.

வேதாளங்கள் தொங்கும்
முருங்க மரங்களின்
வேர்களாகி
மண்ணில் புதையலாம்.

வை சில வேலை
நிஜங்களாகலாம்.

சில வேலை
பொய்களாகலாம்.

ம்பிக்கைகள்
நம்பிக்கைகளாகவே
இருந்ததில்லை
எனக்குமட்டும்...!

Monday, 11 July 2011


உறவின்
அருமைகளை
காலம் கற்று கொடுக்கும்
பாடங்கள் அறிந்து
கொள்வதற்குள்
நேரங்கள் முடிந்து விடுகிறது
இல்லையெனில்
உறவுகளே முரணாகி
விடுகின்றன


இரவின் நீளம் எல்லாம்
தனிமையோடு தான் போகிறது

ஒவ்வொரு முறையும்
உன் நினைவுகளை தொடும்போது
வண்ணத்துபூச்சி சிறகின்றி துடிக்கும்
வேதனை எனக்குள்

அறுந்துவிட்ட பட்டம்
கையில் அகபடாமலே போகிறது

என் கண்ணீரின் துளியில்
உன் இதயம் துடிக்குமானால்
நரம்புகளை கூட அருத்துவிடுகிறேன்

சொல்லாமல் வரும் மரணமும்
சத்தம் இல்லாமல் சாகடிக்கும்
காதலும் ஒன்றுதான்

இரண்டிலும் இதயத்தின்
துடிப்பு
யாருக்கும் தெரிவதில்லை

மீள முடியாத வேதனை
மறக்க முடியாத பாதைகள்
மனம் கனமாய் போகிறது

மௌனம் மட்டுமே வார்த்தை ஆனால்
புல்லாங்குழல் கூட இசையில்
கண்ணீர் சிந்தும் .........
.

உடலை ஆரோக்யமாக வைத்திருக்க சில வழிமுறைகள்

உடலை வளமாக வைத்திருக்க வேண்டும் எனும் ஆர்வம் எல்லோரிடமும் காணப்படுவது இயல்பு. அப்படிப்பட்டவர்கள் இந்த பத்து வழிமுறைகளை கடைபிடிப்பது பயனளிக்கும்.
தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். உடற்பயிற்சி என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் செய்வதல்ல, தினசரி அலுவல்களுக்கிடையே வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் உடற்பயிற்சி செய்யலாம். படிகளில் ஏறி இறங்குவது, அடிக்கடி நடப்பது, கண்களுக்கு பயிற்சி கொடுப்பது, கைகால்களை நீட்டி மடக்குவது, மூச்சுப் பயிற்சி என எவ்வளவோ செய்யலாம்.

தினமும் மூன்று வேளை மூக்கு முட்ட அசைவப் பொருட்களை உடலுக்குள் திணிப்பதை கொஞ்சம் ஒத்தி வையுங்கள். எல்லாம் அளவாய் ஒருப்பதே ஆரோக்கியமானது. தினமும் ஐந்து முறை காய்கறிகள் மற்றும் பழங்களை உண்ணுங்கள். பெரும்பாலானவை வேக வைக்காததாக இருக்க வேண்டியது முக்கியம். சில காய்கறிகள் பாதி வேக வைத்து உண்ணலாம்.
சோர்வாய் இருக்கிறது ஒரு காபி குடிப்போம், போரடிக்கிறது ஒரு காபி குடிப்போம், நண்பர் வந்து விட்டார் ஒரு காபி குடிப்போம் என எதெற்கெடுத்தாலும் காபி அருந்துவதற்கு ஒரு முற்றுப் புள்ளி வையுங்கள். தூய்மையான தண்ணீர், எலுமிச்சை சாறு, செயற்கை இனிப்பு கலக்காத பழச்சாறு, கிரீன் டீ போன்றவற்றை அதற்கு மாற்றாக அருந்தப் பழகுங்கள்.
நல்ல பழக்கங்களைக் கொண்டிருப்பது முக்கியம். குறிப்பாக புகைத்தலை முழுமையாய் விட்டு விடுங்கள். மது அருந்துதல், எதிர்மறை எண்ணங்களை வளர்த்தல் போன்ற அனைத்துமே உடலுக்கு ஊறு விளைவிப்பவை. எனவே நல்ல பழக்கங்கள், நல்ல சிந்தனைகள் இவை முக்கியம்.
மோசமான கொழுப்பு நிரம்பிய உணவுகளை தூரமாய் ஒதுக்குங்கள். குறிப்பாக, சீஸ், சிப்ஸ், பிரன்ச் பிரைஸ், பீட்சா போன்ற அதிக கொழுப்பு உணவுகளை ஒதுக்கித் தள்ளுங்கள். நலமான வாழ்வுக்கு உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம், அதற்கு தேவையற்ற கொழுப்புப் பொருட்களை ஒதுக்குவது மிக மிக அவசியம்.
உணவில் உப்பு சேர்ப்பதை மட்டுப்படுத்துங்கள். அளவுக்கு அதிகமான உப்பு உடலில் பல்வேறு நோய்களைக் கொண்டு வரும். அதிகம் உப்பை உட்கொள்ளும் போது உடலில் சோடியம் அளவு அதிகரிக்கிறது, இது மினரல்களின் சமநிலையைப் பாதிக்கிறது. உயர் குருதி அழுத்தத்துக்குக் கூட இது காரணமாகி விடுகிறது. அதிக உப்பு ரொம்ப ரொம்ப தப்பு என மனதுக்குள் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
உண்பதை நன்றாக மென்று உண்ணுங்கள். அதிக நேரம் மென்று உண்ணும் பொருள் உங்கள் உடலுக்கு அதிக பயனளிக்கும். தேவையற்ற கொழுப்பு சேர்வதிலிருந்தும், வாயுத் தொல்லை, செரிமானப் பிரச்சினை போன்ற அனைத்திலிருந்தும் அது உங்களைத் தப்புவிக்கும். நிறைய தண்ணீர் குடியுங்கள். உடலிலுள்ள அசுத்தங்களை வெளியேற்ற அது உதவும். முக்கியமாக, உணவு உண்டபின் குளிர்ந்த நீரைக் குடிக்கவே குடிக்காதீர்கள். மிதமான சூடுள்ள தண்ணீரையே அருந்துங்கள்.
இனிப்புப் பொருட்களை உண்பதை அளவுடன் நிறுத்திக் கொள்ளுங்கள். உடலின் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது கொழுப்பு, இன்சுலின், டிரைகிளைசெரிட்ஸ் போன்றவற்றின் அளவு உடலில் அதிகரித்து உடலின் எதிர்ப்புச் சக்தியை கொஞ்சம் கொஞ்சமாய் வலுவிழக்கச் செய்யும். நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் வாங்கும் பொருளில் குளுகோஸ், சுக்ரோஸ், லாக்டோஸ், கார்ன் சுகர் என எழுதப்பட்டிருப்பவை எல்லாம் இனிப்புப் பொருட்களே!
எலும்புகள் வலிமையாக இருக்க வேண்டியது உடலின் மிக முக்கியமான தேவை. இல்லையேல் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு உடைவு நோய் வந்து மிகப்பெரிய சிக்கலை உருவாக்கி விடும். எனவே உடலுக்குக் கால்சியம் சத்து அதிகம் கிடைக்கக் கூடிய உணவுகளை தவறாமல் உண்ணுங்கள். எலும்பின் உறுதியை நீர்த்துப் போகச் செய்யும் குளிர்பானங்களை (கோக், பெப்ஸி வகையறாக்கள்) முழுமையாய் ஒதுங்குங்கள். காலை வெயிலிலும் கொஞ்ச நேரம் உலவுங்கள் வைட்டமின் டி இலவசமாய்க் கிடைக்கும்.
தேவையான ஓய்வு, தேவையான தூக்கம், மனதை இலகுவாக்குதல் இவையெல்லாம் மிக மிக முக்கியம். வேலை வேலை என எந்நேரமும் அலையாமல் உடலுக்கும் மனதுக்கும் மகிழ்ச்சியளிக்கும் செயல்களை தினமும் சற்று நேரம் செய்யுங்கள். குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் அன்பாகவும், இனிமையாகவும் செலவிடும் நிமிடங்கள் ஆரோக்கிய உடலுக்கும் வழிவகுக்கும்.