Tuesday, 11 October 2011


திரும்பிய பக்கமெல்லாம்
வெறுமையின் சுவடுகள்.
முகத்தில் அடிக்கிறது
இரத்தத்தின் வாடை
மேடுகளிலும் பள்ளங்களிலும்
அடித்து இழுத்துச் செல்லப்படுகிறது என் உடல்
இன்னும் வேகமாய் திரும்புகிறது
காலத்தின் பக்கம்.
சுமக்க முடியாத சுமைகள் வைத்து
அழுத்தப்படுகின்ற நெஞ்சின் மீது.
சுழற்றி அடிக்கும் காற்றின் வேகத்தில்
ஈடுகொடுக்க முடியாமல்
தூக்கி எறியப்படுகின்றேன் நான்.
மீட்சி கொடுக்கும்
தேவதையின் கரங்களுக்காக
காத்துக் கொண்டிருக்கிறேன்.
இரத்தம் வடியும்
காயப்பட்ட கரங்களே நீட்டப்படுகின்றன.
மரணத்தின் விளிம்பில் இருப்பதாய்
நினைத்துக் கொள்கிறேன் தினமும்.
இன்னும் வேகமாய்
சுழற்றி அடிக்கப்படுகிறேன் நீளும் நாட்களில்....

கவிதைக்கென சேர்க்கப்படும்
வார்த்தைகள் அறுந்து
தொங்குகின்றன அந்தரத்தில்.

பிடிக்கமுடியாத வேகத்தில்
சுற்றிச் சுற்றி வருகின்றன
தனிமையில் இருக்கும் போது.

வாயிலிருந்து ஓயாமல்
வந்துவிழும் வார்த்தைகளை
மண்ணுக்குள் புதைத்து விடுகிறேன்.

அவை விருட்சங்களாக
எழுந்து நின்று
கிளைகள் எங்கும்
வார்த்தைகள்

அவையே மீண்டும்
விதைகளாய் விருட்சங்களாய்
அங்கும் இங்கும் எங்கும்
வார்த்தைகள்.

உன்னைப்பற்றி எழும் உணர்வுகளை
காலம் தன்வசம்
உள்ளிழுத்துக் கொள்கிறது.
காலத்திடம் சண்டையிடும்
திறனில்லை எனக்கு...
கடந்து செல்லும் நாட்களை
இழுத்து பிடித்து நிறுத்தும்
வலிமையில்லை எனக்கு...
மௌனித்திருக்கிறேன்
காலத்தின் கணக்குகளை
கவனித்தபடி....!!
வாழ்க வளமுடன்!!!

Sunday, 9 October 2011


நீ இல்லாத என் உல‌கத்தில் எதுவும் மாறப்போவதில்லை.
உனக்கான என் துக்கம்....
ஏதாவது ஒரு நிலத்தில் அழலாம்!!!
உனக்கான என் பிரியம்....
என் விரல்களைப் பற்றி புலம்பலாம்!!!
உன்னோடு பகிர்ந்து கொள்ள சேர்த்த சொற்களை....
என்ன செய்வதென்று தெரியாம‌ல் போக‌லாம்!!!
உன் பதிலுக்கான என் கேள்விகள் செல்வதற்கான இடம் தெரியாமல் திணறலாம்!!!
உன்னோடு பேசாத தினம் அழிந்து விடப்போவதில்லை.
என்றாலும் நீ இல்லையென்ற‌ வெறுமையை என்ன‌ செய்வ‌தென்று யோசிக்கிறேன்.
தனிமையில்............!!!

வேதனைகளால் நிரம்பிய கோடையின் இரவு ஒன்றை கடவுளிடம் கொடுக்கிறேன்.
கசகசப்பில் அருவருப்படையும்- கடவுள்
இரவின் அடர்த்தியைக் குறைத்து.
சாரல் மழையோடு மெலிதாக காற்று வீசச் செய்கிறார்.
இருந்தும்.......
கோடையின் இரவில் உறங்க‌ முடிவதில்லை
எழுத முடிவதில்லை
நினைக்க முடிவதில்லை.
எதுவுமியலவில்லை என புலம்ப முடிகிறது.
அதுவும்.. எனக்குள்ளே!!

Wednesday, 5 October 2011

உங்கள் விதியை மாற்ற 10 வழிகள்!


1. தினமும் கடவுளைப் பிரார்த்தனை செய்யுங்கள்.
2. எல்லாம் கடவுள் அருளால் நடக்கிறது என்பதை முழுமையாக நம்புங்கள். தீபம், ஊதுபத்தி, மெழுகுவத்தி, சாம்பிராணி ஏதாவது ஏற்றி இறைவனை வணங்குங்கள்.
3. உங்களுக்குத் தெரிந்த மந்திரங்கள், ஸ்லோகங்களைச் சொல்லுங்கள்.
4. உங்கள் வருமானத்தை நியாயமான வழியில் பெறுங்கள். முறையில்லாத வழிகளில் பணத்தை சம்பாதிக்காதீர்கள்.
5. எண்ணம், சொல், செயல்களில் உண்மையைக் கடைப்பிடியுங்கள்.
6. மற்றவர்களுக்கு எந்த பிரதிபலனும் இல்லாமல் உதவி செய்யுங்கள்.
7. பசி என்று வருபவர்களுக்கும், ஏழைகளுக்கும் உங்களாலான உதவியைச் செய்யுங்கள்.
8. வாழ்க்கை நடத்த என்ன தேவையோ அது மட்டும் இருந்தால் போதும், குறைந்த தேவைகளோடு எளிமையாக இருங்கள்.
9. தியாகம், வைராக்கியம் இரண்டையும் மறக்காமல் செயல்படுத்துங்கள்.
10. உங்களின் ஒவ்வொரு விநாடியும் கடவுளால் கண்காணிக்கப்படுகிறது என்பதையும், அவரது ஆசியுடன்தான் வாழ்கிறீர்கள் என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள்.